×

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அக மதிப்பீட்டு மதிப்பெண் இணையதளத்தில் பதிவேற்றம்: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

 

நாகர்கோவில், ஜன.26: தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு பள்ளியில் வழங்கப்பட்ட அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை உரிய வழிமுறைகளை பின்பற்றி இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் அக மதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு பாடத்திற்கும் பாடக்குறியீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய நாட்களில் அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்திற்கு சென்று தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளுக்கான பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தங்களது பள்ளி மாணவர்களது அக மதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

வெற்று மதிப்பெண் பட்டியலை பூர்த்தி செய்து அக மதிப்பீட்டு மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் வேண்டும். பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தங்கள் பள்ளி மாணவர்கள் அனைவரது அக மதிப்பீட்டு மதிப்பெண்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை பள்ளி தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும். எந்த ஒரு மாணவரது மதிப்பெண்களும் பதிவேற்றம் செய்யப்படாமல் இருத்தல் கூடாது. இவ்வாறு சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அக மதிப்பீட்டு மதிப்பெண் இணையதளத்தில் பதிவேற்றம்: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Tamil ,Nadu ,Government ,Examinations ,Dinakaran ,
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது